தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026- 2027-ம் ஆண்டுக்கான முதல் முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று (ஆகஸ்ட் 5) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், மே 10-ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளான 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் படை, மாவட்ட வாரியாக போதைப் பொருள் தடுப்பு படை ஆகிய 3 உத்தரவு கோப்புகளில் முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்டார்.
இந்தநிலையில், தவெக அரசின் 2026- 2027-ம் ஆண்டுக்கான முதல் முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பு தொடா்பாக துறைவாரியாக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் தனித்தனியாக விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சா் மரிய வில்சன் பட்ஜெட் தயாரித்துள்ளாா்.
காலை 10 மணிக்குத் தனது முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, நாளைய தினம் (ஆகஸ்ட் 6) வேளாண்மைத் துறைக்கெனத் தனி பட்ஜெட்டை அந்தத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.
தவெக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளின் அமலாக்கம் குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கான மாத உதவித்தொகை உயர்வு, இலவச எரிவாயு சிலிண்டர் திட்டங்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிதியுதவி மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம். ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்தாண்டு தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், இக்கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்த விவரங்கள் முடிவு செய்யப்படும்.
