விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். 

தமிழ்த்தேசிய விடுதலைக் களத்தில் தனது எழுச்சிப் பாடல்களின் மூலம் பெரும்பங்காற்றிய தேனிசை செல்லப்பா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சிங்கிலிப்பட்டி என்னும் கிராமத்தைச் சார்ந்த செல்லப்பா அவர்கள், தொடக்ககாலத்தில் திராவிடர் கழகத்தின் மேடைகளிலும் பின்னர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் நாம் தமிழர் கட்சியின் மேடைகளிலும் பாடிவந்தார்.

பின்னர் தமிழ்த்தேசியக் களத்தில் ஈடுபாடு கொண்டு தமிழீழ விடுதலைக்கான பாடல்களை இயற்றி பாடினார். அவரது பாடல்கள் எளிய மக்களை ஈர்க்கும் வகையில் இருந்தது.

கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர்.

தமிழீழத் தேசிய விடுதலைக் களத்தில் இவரது பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் ‘ பாசறைப் பாணர் ‘ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

என் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கொண்ட பற்றுதலால் விடுதலைச் சிறுத்தைகளுக்காக அவரே பல பாடலை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார்.

தனது எழுச்சிமிகு குரல்வளத்தால் உலகத்தமிழர்களிடையே தமிழ்த் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனிசை செல்லப்பா அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் சீராக இல்லாமையினல் மேடைகளில் பாடாமல் ஓய்வு எடுத்து வந்தார்.  எனினும், கடந்த 2024 ஆம் ஆண்டு விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்ற “மாவீரர் நாள்” நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ்த்தேசிய பாடல்களை எழுச்சியுடன் பாடினார். அதுவே அவர் பாடிய கடைசி மேடையாகவும்  அமைந்தது.

தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் இழப்பு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பு! 

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளை (29.04.2026)  காலை சென்னை அருகே படப்பையில் நடைபெறும் அவரது நல்லடக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாக பங்கேற்று வீரவணக்கம் செலுத்திட வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version