காராஷ்டிர மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான நிதேஷ் ராணேவுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கில் சிந்துதுர்க் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஒரு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று மும்பை-கோவா நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலைப் பணிகள் மோசமாக இருப்பதாகக் கூறி அப்போது எதிர்க்கட்சியில் இருந்த நிதேஷ் ராணே மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசு ஊழியரான தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பொறியாளர் பிரகாஷ் ஷெடேகரை அழைத்து விசாரித்தபோது, சேறு நிறைந்த தண்ணீரை அவர்மீது கொட்டியதாகவும், அவரை அவமானப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக 30 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி வி.எஸ். தேஷ்முக் தலைமையிலான சிந்துதுர்க் கூடுதல் அமர்வு நீதிமன்றம், நிதேஷ் ராணேவை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504 (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதித்தல்) கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஒரு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. மற்ற 29 பேரையும் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவித்தது.

நீதிபதி தனது தீர்ப்பில், “சாலைப் பணி மோசமாக இருந்தது, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது என்பதற்காகக் குரல் எழுப்புவது ராணேவின் நோக்கமாக இருந்தாலும், பொதுவெளியில் அரசுப் பணியாளரை அவமானப்படுத்தக் கூடாது. சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்க எம்.எல்.ஏ.க்களோ, அரசியல்வாதிகளோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது அதிகார துஷ்பிரயோகம்” என்று குறிப்பிட்டார். பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க அரசு ஊழியரை பொதுவில் அவமதிப்பது நியாயமற்றது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

எனினும், தண்டனையை உடனடியாக அமல்படுத்தாமல் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, நிதேஷ் ராணேவுக்கு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனால் அவர் உடனடியாக சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்தச் சம்பவம் 2019 இல் நடைபெற்றபோது நிதேஷ் ராணே எதிர்க்கட்சியில் இருந்தார். தற்போது மகாராஷ்டிர அமைச்சரவையில் அவர் பொறுப்பு வகிக்கிறார்.இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version