தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த தேனிசை செல்லப்பா, தனது 85 ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் புகழஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தேனிசை செல்லப்பாவின் தமிழ்ப் பணிகள் குறித்து தெரிவித்தார்.

புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியது தேனிசை செல்லப்பாவின் குரல்தான். காசியானந்தன், மரத்தமிழன் ஆகியோரின் பாடல்களையும், தானே சொந்தமாக எழுதியப் பாடல்களையும் பாடியவர் தேனிசை செல்லப்பா. பெயர்தான் தேனிசை செல்லப்பாவே தவிர,இன எழுச்சி முழக்க இசை அவருடையது.

கடைக்கோடி மண்ணில் இருந்த பல லட்சக்கணக்கான பிள்ளைகளுக்குஇன உணர்வு, மான உணர்வு, மொழிப்பற்று வரலாற்று பெருமை இவையெல்லாம் கொண்டு வந்து சேர்த்தது அவரது குரல்தான். தமிழையும் தலைவனையும் மட்டுமே பாடிய அந்தக் குரல், அதன்பிறகு எனது கட்சியைப் பாடியுள்ளது.

சி.பா.ஆதித்தனா நாம் தமிழர் கட்சியைத் தொடங்கியபோது அதில் இருந்த முதன்மையானவர்களில் ஒருவர் தேனிசை செல்லப்பா.

ஆயிரக்கணக்கான பாடல்களை இன எழுச்சிக்காகப் பாடியுள்ளார். கடைசிவரை இன உணர்வு, மான உணர்வு, விடுதலைப் பற்றில் இருந்து ஒரு துளியும் விலகாத போராளி அவர்.

ஒவ்வொரு இளைஞருக்குள்ளும் போர்க்குணம் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் தேனிசை செல்லப்பாவின் பாடல்கள்தான்.

இந்த இனத்தின் மீது பற்று கொண்ட பெருங்கலைஞர் இனி தோன்றி வருவாரா?

கொண்ட கொள்கையில் துளியும் மாறாதவராகவே இருந்தவர் தேனிசை செல்லப்பா. அவரது குரல் எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் இளைஞர்களை உசுப்பிக் கொண்டே இருக்கும்.

இந்தப் பாடல்கள் இருக்கும்வரை தமிழ்ச்சமுகத்தோடு இணைந்து ரத்தமும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருப்பார்.

மதிப்பு மிக்க எங்கள் தலைவருக்கு புகழ்வணக்கத்தை செலுத்திக் கொள்கிறோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version