நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசின் நடவடிக்கையை அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில்,
“நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக ராப் பாடகரும், என் அன்பு சகோதரருமான ‘தெருக்குரல்’ அறிவை கைது செய்த தமிழக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவரது குரல் தமிழ்நாட்டின் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாடு முழுவதும் CJP தலைமையில் நீட் எதிர்ப்பு பேரணிகளும் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் இந்த நேரத்தில், அறிவை கைது செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது, டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தெருக்களில் இறங்கி போராட நினைக்கும் இளைஞர்களுக்கு கவலைக்கிடமான ஒரு செய்தியை அனுப்புகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
உதயநிதிதனது பதிவில், “நீட் தேர்வு என்பது வெறும் முறைகேடுகள் நிறைந்த தேர்வு மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய மோசடியாக மாறிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிராக எழும் குரல்களை ஒடுக்காமல், அவற்றை கேட்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
