கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆட்டம் அடியோடு தலைகீழாக மாறியுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஓலே ராபின்சன் வீசிய ஒரு அசாத்தியமான ஓவர், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி லண்டனின் பழமையான லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 39.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.  இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து பவுலர் ஓலே ராபின்சன் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை நிலைகுலையச் செய்தார். அவர் வீசிய ஒரு குறிப்பிட்ட ஓவரில், நியூசிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

https://x.com/englandcricket/status/2062585500536377397?

அதாவது,  கான்வே (1 ரன்), கேன் வில்லியம்சன் & ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ரன் இன்றி அவுட்டாகினர். அதுமட்டுமின்றி, ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த ஓவரை அவர் ‘மேடன் ஓவராகவும் மாற்றி அசத்தினார். நியூசிலாந்து அணியின் தூண்களாகக் கருதப்படும் வில்லியம்சன், கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய மூவரையும் சொற்ப ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிக்கு பெரும் பலமாக அமைந்தது.

உலகில் உள்ள மற்ற மைதானத்தை விட லார்ட்ஸ் அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. லார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க திணறினர். இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை வேட்டையாடியதில், ஆட்டத்தின் முதல் நாள் முடிவதற்குள்ளேயே இரு அணிகளையும் சேர்த்து மொத்தம் 16 விக்கெட்டுகள் சரிந்து விழுந்தது ரசிகர்களுக்கு பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version