தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட வாக்குறுதிகளுடன் சேர்த்து மக்களுக்கு 436 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

 

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடர், மக்களுக்கான திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம் முடிவுற்றபின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார், தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதை சேர்த்து மொத்தம் 436 திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு துறை வாரியாக 10 திட்டங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்,  அந்த திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என முழு அளவில் திட்டவடிவத்துக்கு கொண்டு வந்து பின்னர் முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று அவை செயல்படுத்தப்படும்  என்றார்.

டாஸ்மாக்கில் 717 கடைகள் முடப்பட்டுள்ளதாகவும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த திமுக ஆட்சியில்தால் கஞ்சா தொடங்கி  மெத்தம்பெட்டமைன் சிந்தெடிக் டிரக்ஸ், குட்கா, கூல்லிப் என புதுபுதுப் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

போதைப் பொருட்களை ஒழிக்க காவல் துறையை முதலமைச்சர் முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறினார்.

விவசாயிகள் நலன், மகளிர் நலன், இளைஞர் நலன் சார்ந்து இயங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அனைவரும் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளதாக நிர்மல்குமார் தெரிவித்தார்.

 

மேகதாது அணை தொடர்பான கேள்விக்கு  எந்த வகையிலும் மேகதாது அணை கட்டுவதற்கான எந்த முயற்சிகளை எடுத்தாலும் அதை சட்டப்பூர்வமாக தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் முடுக்கி விட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்தது தொடர்பாக தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், அதனைக் கண்டு கொள்ளாமல் அமைச்சர் நிர்மல்குமார் நழுவிச் சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version