ஜூன் 5-ம் தேதி காலை விடிந்ததிலிருந்து உலகை தக் லைஃப் காய்ச்சல் பிடித்துவிட்டது. முதல் காட்சி, சிறப்புக் காட்சி என அனைத்தையும் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகல் மலைபோல் குவிந்து வருகிறது. அதில் பரவலான கருத்துகள் சிலவற்றைப் பார்ப்போம். 

மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று (ஜூன் 5, 2025) உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் 1987-ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ படத்திற்கு பிறகு, கமல் மற்றும் மணிரத்னம் இணையும் முக்கியமான படைப்பாகும். திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அஷோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ளார். ரசிகர்கள் நீண்ட காலம் காத்திருந்து இணைந்த கூட்டணி என்பதாலும், படத்தில் உள்ள நட்சத்திரங்களாலும் தக் லைஃப் பெரும் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. 

குற்ற உலகை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது டிரெய்லரின் வழியாகத் தெரிந்தாலும், பொதுவாகவே மணிரத்னம் அப்படித் தன் கதை ரிவீல் ஆகும்படி டிரெய்லரை வெளியிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது. மேலும் படத்துக்காக நாயகர்கள் இறங்கிச் செய்த புரொமோஷன்கள் இன்னும் ஆர்வத்தைத் தூண்டின. இந்நிலையில் முதல் காட்சியில் படத்தை பார்த்துவிட்ட ரசிகர்கள் சிலர் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

கலவையான விமர்சனங்களையே தக் லைஃப் சந்திக்கிறது. முதல்பாதி வரையில் பார்த்த ரசிகர்கள் சிலர், தகுந்த இடத்தில் இடைவேளை விட்டிருக்கும் விதத்தைப் பாராட்டி வருகின்றனர். முதல் பாதி கமல்ஹாசனுக்கு சரியான கம்பேக் என்று காலை 5 மணிக்கே படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் உணர்ச்சி பொங்க பதிவிட்டிருக்கிறார். 

மறுபுறம் ”மணிரத்னம் படங்களை இனி பார்ப்பதாய் இல்லை. மிகவும் அவுட் டேட்டடாக இருக்கிறார். அவருடைய படங்கள் மிகவும் போரடிக்கிறது. கமல்ஹாசன், சிம்பு இருவரது திறனையும் கெடுத்து வைத்திருக்கிறார்” என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவர் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தைப் பார்த்தது போல்தான் இருக்கிறது என்றும், அதிலுள்ள அதே கதாபாத்திர அம்சங்களே இதிலும் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்தப் படத்தில் எப்படி அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹிதாரியோ அதே போல் தான் இந்தப் படத்தில் கமல்ஹாசனும் திரிஷாவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

”படம் நன்றாக இருக்கிறது. நெகட்டிவ் விமர்சனங்கள் வைப்பவர்களை நம்பாதீர்கள். அவர்களெல்லாம் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு பொய் பரப்புரைகளைச் செய்து வருகின்றனர். திரையரங்கில் மெய் சிலிர்க்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது” என்று ரசிகர் ஒருவர் சாடியுள்ளார். படத்தின் முதல் பாதி ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அமைந்திருப்பதாகவும், கமல்ஹாசனின் நடிப்பும், ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பின்னணியும் கதைக்குப் பலம் சேர்த்திருப்பதாகவும், சிம்புவின் நன்றாக நடித்திருக்கிறார் என்றும் இன்னொரு ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர், முதல் பாதி பரவாயில்லை என்றும் இரண்டாம் பாதி அதற்கும் குறைந்தது என்றும் குறிப்பிட்டதோடு, அப்படி எதற்கு ரூ.300 கோடியை செலவழித்தார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தக் லைஃப் தேறுமா? 

படத்தின் கதை டிரெய்லரில் இருந்து யூகிக்க முடிந்ததாக அமைந்ததை ரசிகர்கள் பின்னடைவாகப் பார்க்கிறார்கள். கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி எனத் தேர்ந்த நடிகர்களின் பட்டாளம் தங்கள் நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டாலும் திரைக்கதை மெதுவாக நகர்வது ரசிகர்கர்களுக்கு போரடிக்கும் உணர்வைக் கொடுத்து விடுகிறதாம். காட்சிகளுக்கு இடையே த்ரிஷாவுடனும் அபிராமியுடனும் கமல் செய்யும் களியாட்டங்கள் ஓரளவு ரசிக்கும் வகையில் இருந்தாலும், தேவையில்லையே என்று முகம் சுழிக்கவும் வைக்கிறதாம். மேலும், த்ரிஷா கதாபாத்திரத்தை இயக்குநர் வீணடித்துவிட்டார் என்றும் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். முதல் பாதியில் இருந்த துள்ளலுக்கு நேர் மாறாக இரண்டாம் பாதியை உணர்ச்சிப்பூர்வமாக மணிரத்னம் கையாண்டிருப்பது, இதே ஃபீலில் ஏற்கெனவே நிறைய பார்த்துவிட்டோமே என்ற உணர்வைக் கொடுப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். தொழில்நுட்ப ரீதியாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைக்காகவும் படம் பேசப்படும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

முன்னதாக சின்மயி – தீ சர்ச்சை, தமிழ் – கன்னடம் சர்ச்சை எனப் படத்தை எல்லா விதத்திலும் புரமோட் செய்யும் வேலைகள் நடந்து வந்த நிலையில், தூள் பட பரவை முனியம்மா சொல்வதுபோல் “இததான் ராத்திரி பூரா ஒட்டிக்கிட்டு இருந்தியா” என்றபடி இருக்கிறது படம் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் உள்ளக்கருத்தாக இருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version