தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21-ம் தேதி இரவு நிகழ்ந்த இந்த விபத்தில், அங்கு பணியாற்றிய வட மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
உடனடியாக மீட்கப்பட்டவர்கள் திருவள்ளூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 10 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும் சிலர் உயிரிழந்தனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா ஜுஜிங்கா (28) மற்றும் பிங்கி ஜுஜிங்கா (21) ஆகியோரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமித்ரா ஜிங்கா (22) ஆகியோரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்தது. இதையடுத்து, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரீத்தி தேவி என்பவரும் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த அனைவரும் வட மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் இருந்து 13 பேரும், செங்குன்றம் அருகே நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து 8 பேரும் என மொத்தம் 21 பெண் தொழிலாளர்கள் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்போது கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மாநிலமான அசாம் அரசின் பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.
குழுவின் மூத்த ஆலோசகர் சுராஜித் போர்வா தலைமையில் 5 பேர் கொண்ட குழு மஞ்சங்காரணை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 16 தொழிலாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது. சிகிச்சை முறைகள், மருத்துவ வசதிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய சுராஜித் போர்வா, “தமிழ்நாடு அரசு வழங்கும் தீவிர சிகிச்சை மற்றும் ஒத்துழைப்புக்கு அசாம் மாநில அரசின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குணமடைந்து முகாமுக்கு திரும்பியவர்களை சந்தித்த பிறகு தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
இந்த சம்பவம் தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தொழிலாளர் நலன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

