ரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வின்  உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் , உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்புக்கு எதிராக நாளை காலை தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி முதலமைச்சர் விஜய், கடந்த 10-ம் தேதி கரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த அரசாணையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, அரசுப் பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சாலை விபத்து, சிவகாசி வெடி விபத்து உள்ளிட்ட பிற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இதேபோல் அரசுப் பணி வழங்கப்படுமா என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பல்வேறு சட்டரீதியான குறைபாடுகள் இருப்பதாக தமிழக அரசு கருதுகிறது. குறிப்பாக, அரசுப் பணி நியமன ஆணை பெற்றவர்களை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், அவர்களது தரப்பு வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

எனவே, இயற்கை நீதி கோட்பாடுகள் பின்பற்றப்படவில்லை என்ற அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலும், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version