சென்னை: தமிழ்நாடு அரசு மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை வேகப்படுத்துவதற்காக 2,500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பத்திரங்கள் (Government Securities) வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகம் வாயிலாக முழுக்க மின்னணு முறையில் ஏலம் நடத்தப்படவுள்ளது.

அரசு புதிய பாலங்கள், சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட நீண்டகால உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. வரி வருமானத்துடன் கூடுதலாக இத்தகைய பணிகளுக்கு தேவையான நிதியை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டும் வழக்கம் உள்ளது. பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு பணம் பெற்று, வட்டி வழங்கி, முதிர்வு காலத்தில் அசல் தொகையை திருப்பித் தரும் முறையே இதன் அடிப்படை.

இம்முறை 2,500 கோடி ரூபாயை ஒரே தவணையில் திரட்டாமல், மூன்று பகுதிகளாகப் பிரித்து ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 1,000 கோடி ரூபாய் 10 ஆண்டு முதிர்வு காலத்துடன், மற்றொரு 1,000 கோடி ரூபாய் 15 ஆண்டு முதிர்வு காலத்துடன் மற்றும் 500 கோடி ரூபாய் 25 ஆண்டு நீண்டகால முதிர்வு காலத்துடன் வெளியிடப்படும். இந்தப் பிரிவினை மூலம் அரசுக்கு திடீர் நிதிச் சுமை ஏற்படாமல், சீரான முறையில் தவணைத் தொகை செலுத்தவும், நிதி மேலாண்மையை திறம்படச் செய்யவும் வசதியாக இருக்கும்.

ஏல நடைமுறை ரிசர்வ் வங்கியின் E-Kuber இணையதளம் வாயிலாக நடைபெறும். பெரிய வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவை போட்டி ஏல முறையில் பங்கேற்கும். தனிநபர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் Retail Direct செயலி அல்லது இணையதளம் மூலம் போட்டியற்ற ஏல முறையில் பங்கேற்று பத்திரங்களை வாங்கலாம்.

முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை வட்டி வழங்கப்படும். அரசு பத்திரங்கள் என்பதால் 100 சதவீத பாதுகாப்பு உண்டு. பங்குச் சந்தை போன்ற ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் உறுதியான வருமானம் கிடைக்கும். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்த இத்தகைய நிதி திரட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கை மாநிலத்தின் நிதி வலிமையை அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version