ஒரு பள்ளியை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 1,214 என்ற எண்ணிக்கையில் காலியாக இருக்கிறது.

கல்வி என்பது வெறும் பாடப்புத்தக அறிவை மட்டும் அளிப்பதல்ல; அது மாணவர்களின் மனதைப் பண்படுத்தி, சிந்தனைத் திறனை வளர்த்து, சமூகப் பொறுப்புணர்வையும் நற்பண்புகளையும் விதைக்கும் உன்னதக் கருவியாக விளங்குகிறது. இத்தகைய கல்வியை மாணவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் பாலமாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். ஒழுக்கம், ஆளுமை வளர்ச்சி, சமூக மதிப்புகள் ஆகியவற்றை மாணவர்களிடம் புகுத்தும் அறப்பணியைச் செய்யும் ஆசிரியர் தொழில், உலகின் அனைத்துத் தொழில்களுக்கும் தாய்த் தொழிலாகப் போற்றப்படுகிறது.

ஒரு நாட்டின் முன்னேற்றமும் மனிதவள மேம்பாடும் பள்ளி வகுப்பறைகளிலிருந்தே தொடங்குகின்றன என்பது உலகளாவிய உண்மை.ஆனால் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் பெரும் அளவில் காலியாக உள்ள நிலை கவலையளிக்கிறது. ஜூன் 11-ம் தேதி வரையிலான பள்ளிக்கல்வித் துறையின் புள்ளிவிவரங்களின்படி, ஒப்பளிக்கப்பட்ட மொத்த இடங்கள் 1,14,248 ஆகும். இதில் 96,141 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சிய 18,107 இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.

இந்தக் காலியிடங்களில் பெரும் பகுதி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாகும். 7,252 இடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 2,833 உள்ளன. பள்ளிகளை வழிநடத்தும் தலைமை ஆசிரியர் பதவிகளில் மட்டும் 1,214 இடங்கள் காலியாக இருக்கின்றன. மாவட்ட அளவில் பார்க்கும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 93 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற காலியிடங்கள் பல மாவட்டங்களில் தொடர்ந்து நீடிப்பது பள்ளிக்கல்வியின் தரத்தை பாதிக்கிறது.

குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் அடிப்படை அறிவைப் பெற முடியாமல் திணறுகின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் மீது கூடுதல் வகுப்புகள் மற்றும் பிற பாடங்களின் பொறுப்பு விழுகிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தமும் பணிச்சுமையும் அதிகரிக்கிறது. இறுதியில் பாதிக்கப்படுவது மாணவர்களின் கற்றல் திறனும் கல்வித் தரமும்தான்.

கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் இந்தப் பிரச்னையில் பள்ளிக்கல்வித் துறை தீவிர கவனம் செலுத்தி விரைவில் காலி இடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக அமையும். தொடர் கண்காணிப்பு மற்றும் விரைவான பணியமர்த்தல் மூலம் மட்டுமே கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நிரப்ப முடியும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version