தமிழ்நாட்டில் அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் மதுபான விற்பனையை தனியார்மயமாக்கும் திட்டம் குறித்து சமீபத்தில் பரவிய தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதிய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, டாஸ்மாக் கடைகளை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவை பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “டாஸ்மாக் நிர்வாகத்தை தனியார்மயமாக்குவது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டார். மதுவிலக்குத் துறை தற்போது மோசமான நிலையில் இருப்பதால் அதைச் சீர்செய்ய பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுபான சில்லறை விற்பனை தனியார் கைகளில் இருந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே நேரடியாக விற்பனையை மேற்கொள்ளும் என அறிவித்தார். அதன்பிறகு 23 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலமே மது விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 2,500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இவை அரசுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தருகின்றன.
தகவல்களின்படி, முதற்கட்டமாக நகர்ப்புற டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைத்து, பின்னர் படிப்படியாக முழுவதையும் தனியார்மயமாக்கும் திட்டம் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் அரசு வருவாய், வேலைவாய்ப்பு, கட்டுப்பாடு போன்ற பல அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் விக்னேஷ் மேலும் பேசுகையில், கனிம வளக் கடத்தல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அண்டை மாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தலைமைச் செயலக வட்டாரங்கள், விவாதம் நடைபெற்றது உண்மை என்றாலும் விரைவில் அறிவிப்பு வரலாம் எனக் கூறுகின்றன. மக்கள் நலன் மற்றும் அரசு வருவாயை கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

