சின்னத்திரை நடிகர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக சின்னத்திரை நடிகர்கள் சங்கம் தரப்பில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அந்தக் கோரிக்கை தீர்மானம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதமாக அனுப்பப்பட்டுள்ளது.
அந்த தீர்மான விவரம் வருமாறு;-
1.சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை:
சின்னத்திரை தொடர்களில் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாமல் நடித்து வருபவர்களை கண்காணிக்க ‘ஸ்குவாட்’ (Squad) குழுக்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தளங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு உறுப்பினராக இல்லாதவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை பெற 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள்ளும் அவர்கள் கார்டு பெறவில்லை எனில், அவர்கள் நடிப்பதற்கான அனுமதி மறுக்கப்படும்
2. சிறு கதாபாத்திரங்களிலும் சங்க உறுப்பினர்களே நடிக்க வேண்டும்:
ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டுகள் (Junior Artist Agents) கூட்டத்தை (Crowd) மட்டுமே வழங்க வேண்டும்; வசனம் பேசி நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஆட்களை அனுப்பக் கூடாது. மருத்துவர், வழக்கறிஞர் போன்ற ஒரு நாள், இரண்டு நாள் வரக்கூடிய சிறு கதாபாத்திரங்கள் என்றாலும், அதில் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. கூடுதல் நேரப் பணிக்கு கூடுதல் ஊதியம்:
சின்னத்திரை படப்பிடிப்பு நேரம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே. சில சூழ்நிலைகளில் பணி நீட்டிக்கப்பட்டால், இரவு 12 மணி வரை வேலை செய்யும் பட்சத்தில் அரை நாள் கூடுதல் ஊதியமும் (Half-day pay), நள்ளிரவு 2 மணி வரை நீடித்தால் இரட்டிப்பு ஊதியமும் (Double pay) வழங்கப்பட வேண்டும்.
4. நடிகர் உதவியாளர்களுக்கான புதிய கட்டுப்பாடு:
சமீபகாலமாக நடிகர்களின் உதவியாளர்கள் (Helpers/Assistants) தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இதனை சீரமைக்க, உதவியாளர்களின் ஆதார் விபரங்களை சேகரித்து, சின்னத்திரை நடிகர் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் அவர்களுக்கு ஒரு பிரத்யேக ‘டேக்’ (Tag/அடையாள அட்டை) வழங்கப்படும். இந்த டேக் வைத்துள்ள உதவியாளர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
