ஃபிஃபா உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றுள்ளநிலையில், அதன் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தங்கப் பந்து மற்றும் தங்கக் காலணி ஆகிய இரண்டு உயரிய விருதுகளையும் வென்று சாதனை படைக்க பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி கோல் அடிக்காவிட்டாலும், என்ஸோ பெர்னாண்டஸ் மற்றும் லாடரோ மர்டினெஸ் ஆகியோரின் கோல்களுக்கு 2 அபாரமான அசிஸ்ட்களை வழங்கி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்த 2 அசிஸ்ட்களின் மூலம் பிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பேயைப் பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி தங்கக் காலணி பந்தயத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் மெஸ்ஸி. ஃபிஃபா விதிகளின்படி, இரு வீரர்கள் சமமான கோல்களை அடித்திருந்தால், அதிக அசிஸ்ட்கள் செய்தவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் மெஸ்ஸியே முதலிடத்தில் உள்ளார்.

மேலும், தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதையும் மெஸ்ஸி வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. 39 வயதான மெஸ்ஸி, இந்தத் தொடரில் அர்ஜென்டினாவின் ஒவ்வொரு நாக்-அவுட் போட்டியிலும் முழுமையாக விளையாடி, அணியை இறுதிப் போட்டி வரை ஒற்றை ஆளாகத் தாங்கி பிடித்துள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (21) மற்றும் அதிக அசிஸ்ட்கள் (12) செய்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது. அன்றைய தினம் அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் பட்சத்தில், மெஸ்ஸி உலகக் கோப்பையுடன் சேர்த்து சிறந்த வீரருக்கான தங்கப் பந்து மற்றும் அதிக கோல் அடித்ததற்கான தங்கக் காலணி ஆகிய இரண்டையும் பெறுவார் என ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version