மறைந்த  முன்னாள் இந்திய பிரதமர் வி.பி சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் என்.ஆனந்த்,  ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வெங்கட்ரமணன் , மரிய வில்சன், குமார் ஆகியோர் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள வி.பி.சிங்கின் திரு உருவ சிலை மற்றும் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சமூக நீதிக்காக போராடியவர் வி.பி.சிங். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது கூட மக்களை முன்னிறுத்திய அவர்,  தனது வாழ்நாள் முழுவதும் தலித் சமூக மக்கள், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்காக உழைத்தவர்.  காவேரி பிரச்சனைக்காக காவிரி நடுவர் மன்றத்தை அமைத்த வி.பி.சிங்குக்கு தமிழ்நாட்டுடன் அன்பும் உறவும் நீடித்திருந்தது. அவர் ஆட்சியில் இருந்த  11 மாதத்தில் 30 வருடங்களின் சாதனையை நிகழ்த்தியவர் எனப் புகழாரம் சூட்டினார்.

சமூக நீதி கணக்கெடுப்பை மு.க.ஸ்டாலின் அரசு செய்யவில்லை. ஆனால், வி.பி.சிங் வழியில்  முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் அரசு சமூக நீதி கணக்கெடுப்பை நடத்த உள்ளது.

கர்நாடகா, தெலங்கான, பீகார் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் செய்யவில்லை. சமூக நீதிக்காக எந்த ஒரு முன்னெடுப்பையும் திமுக அரசு செய்ததில்லை

முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அரசு வி.பி.சிங் கனவு கண்ட சமூக நீதிக்கான அரசாக செயல்படும் என்றார்.

சட்டமன்றத்தில் முதல்நாளில் இருந்தே தவெக எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் அவையின் மாண்பைக் கடைப்பிடித்து, திட்டங்களையும் கொள்கைகளையும்தான் பேசி வருவதாகவும், ஆனால் 75 வருட கட்சி எனக் கூறிக் கொள்ளும் திமுக, அப்படி நடந்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் முதல் முறையாக எந்த முதலமைச்சரும் செய்யாத வகையில் எதிர்க்கட்சிகள் பேசுவதையும்கூட சட்டசபையில் முழு நேரலையில் கொடுக்கப்பட்டது..

உதயநிதி ஸ்டாலின் இருந்த  போதே அவர்கள் கட்சியினர் கேலி, கிண்டல்கள் ஒருமையில் பேசக்கூடியதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்…

தமிழக வெற்றிக்கழகம் நடத்துவது காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் அரசியல் கூறுகிறார் . நாங்கள் என்றும் எங்களது கொள்கைகளையும் உரிமைகளையும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதில்லை.  சோபா மாடல் அரசு என விமர்சிக்கிறார்..

இந்த  அரசு வெளிப்படை தன்மையோடு உள்ளது.  நான் உண்மையாக இருக்கிறேன் ,நான் நேர்மையாக இருக்கிறேன் என்னும் ஒரு அரசு இருந்தால்தான் சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப முடியும். அந்த தைரியத்தை எங்கள் தலைவர் செய்துவிட்டார். இது மிகப்பெரிய வரலாறு. இதை யாராலும் மறுக்க முடியாது என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.

திருமாவளவன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார் அவர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது . நல்ல கருத்துக்களை நாங்கள் நிச்சயம் வரவேற்போம். திமுகவின் போலியான பிரச்சாரங்களுக்கு மட்டுமே நாங்கள் பதில் சொல்கிறோம் எனக் கூறினார்.

பார்ட்டி பண்டு என்று தான் முதலமைச்சர் சொன்னார் திமுகவின் பார்ட்டி பண்டு என்று சொன்னாரா?  பார்ட்டி பண்ட் என்று சொன்னவுடனே திமுகவினர் ஏன் கொந்தளித்தனர்.. யாராவது ஒருவராவது திமுக லஞ்சம் வாங்கவில்லை என்று கூற முடியுமா? என வினா எழுப்பிய ஆதவ் அர்ஜுனா,

மக்களுக்காக எந்த அளவிற்கு  திட்டம் போட்டார்களோ அதே போல ஊழல்களுக்கும் திட்டம் போட்டனர்..இந்த ஊழல் திட்டங்களை தமிழக வெற்றிக் கழகம் ஒழித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையிலும் பல ஊழல்கள் நடந்துள்ளது அன்பில் மகேஷ் பொய்யாமொழி தைரியமாக சொல்வாரா? நான் பணம் வாங்கவில்லை என்று?

எங்கள் முதலமைச்சர் மைக்கை பிடித்து பணம் வாங்க மாட்டோம் என்று சொல்கிறார் என்றால் அவர்களுக்கு அந்த அளவு வெளிப்படை தன்மையும் தைரியமும் இருக்கிறது…

 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் நேர்மை இல்லை எனவும், கடந்த ஆட்சியில் 32 அரசுத் துறைகளை சபரீசனும், உதயநிதியும் பங்கிட்டுக் கொண்டு அமைச்சர்கள் துணையுடன் ஊழல் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

திமுக எப்பொழுதுமே தனிப்பட்ட தாக்குதல் அரசியல் மட்டுமே செய்வதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உடைக்க மு.க.ஸ்டாலின் திட்டமிடுவதாகவும் ஆ.ராசாவை வைத்து கூட்டணியில் இருந்து சென்றவர்களை அநாகரிகமாகப் பேச வைத்தப்பதாகவும் சாடினார்.

திமுக ஆட்சியில் நடந்த சட்டசபையில் முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் அமைச்சர்கள் புகழ்ந்து பேசியதாகவும், ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை, ஜனநாயக மரபுபடி சட்டப்பேரவை நடைபெறுவதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்து அவர்களை அசிங்கப்படுத்தியதும் திமுக தான் எனவே மரபு என்பது திமுகவினருக்கு கிடையாது.. விமர்சனங்களை எல்லாம் தேர்தல் நேரத்திலேயே புறக்கணித்து விட்டோம் அதற்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version