தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு அமைந்த பிறகு முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட், விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அமைச்சர் வினோத் 129 நிமிடங்கள் வாசித்த இந்த பட்ஜெட்டில், தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், உருப்படியான புதிய திட்டங்கள் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி, “வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட, முதல்வருக்கு மரபுக்கு மாறான புகழுரை வாசிக்கப்பட்டது போல உள்ளது. புதிதாக எந்த அறிவிப்பும் இல்லை” எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி, ‘வெற்றி’ என்ற சொல்லை சேர்த்து புதியதாக காட்டிக்கொள்ளும் முயற்சி நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர், கடந்த மூன்று மாதங்களாக பயிர்க்கடன், நீர் பற்றாக்குறை, குறுவை சாகுபடி இடர்பாடுகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் நீடிப்பதாகக் கூறினார். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டி, “விஜய் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை” என்றார்.காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசு மௌனம் சாதிப்பதாகவும் விமர்சித்த உதயநிதி, கர்நாடகா தண்ணீர் தர முடியாது என அறிவித்திருப்பதாகவும், அம்மாநில முதல்வர் விஜயை வரவேற்க மறுத்ததாகவும் குறிப்பிட்டார்.
மேகதாது அணையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசு குரல் கொடுக்கவில்லை எனச் சாடினார். விவசாயிகளின் உரிமைக்காக திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தியதை நினைவுகூர்ந்த அவர், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தினார்.
நாளை சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, காவிரி விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதாகவும், முதல்வர் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் உதயநிதி தெரிவித்தார். திமுக எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும் என உறுதியளித்தார். இந்த விமர்சனங்கள், தமிழக அரசியலில் வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை விவகாரங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதை எடுத்துக்காட்டுகின்றன.
