2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் குரூப் ‘டி’ பிரிவின் தொடக்க ஆட்டத்தில், தொடரை நடத்தும் அமெரிக்க அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் அமெரிக்கா பதிவு செய்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே அமெரிக்க அணிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது. பராகுவே வீரர் டாமியன் பொபாடிலா பந்தைத் தடுத்தபோது அது எதிர்பாராதவிதமாக அவர்களின் சொந்த கோல் போஸ்ட்டிற்குள் சென்றது. இதனால் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.

அமெரிக்காவின் நட்சத்திர வீரர் ஃபோலரின் பலோகன் (Folarin Balogun) ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் ஒரு கோலும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+4′) மற்றொரு கோலும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியிலேயே அமெரிக்கா 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் பாதியில் அமெரிக்கா பெற்ற மிகப்பெரிய முன்னிலை இதுவே ஆகும்.

இரண்டாவது பாதியில் பராகுவே அணி ஆட்டத்திற்குள் மீள முயன்றது. அதன் பலனாக 72-வது நிமிடத்தில் அந்த அணியின் மொரிசியோ (Mauricio) ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மாற்று வீரராக களம் புகுந்த அமெரிக்காவின் ஜியோவானி ரெய்னா (Giovanni Reyna), ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+7′) ஒரு அபாரமான கோல் அடித்து அமெரிக்காவின் 4-1 என்ற வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.

இதற்கு முன்னதாக உலகக் கோப்பை தொடர்களில் அமெரிக்கா 3 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இதற்கு முன்பு 1930 உலகக் கோப்பையில் பெல்ஜியம் மற்றும் பராகுவே அணிகளை தலா 3-0 என்ற கணக்கில் அமெரிக்கா வீழ்த்தியிருந்தது. தற்போது 4 கோல்கள் அடித்து 4-1 என வென்றதே உலகக் கோப்பையில் அமெரிக்காவின் அதிகபட்ச கோல் வேட்டையாகும்.

அமெரிக்கா இடம்பெற்றுள்ள குரூப் டி பிரிவில் பராகுவே, ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய அணிகள் உள்ளன. இந்த வெற்றி மூலம் அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version