கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து திருக்குறளுக்கு தாம் எழுதியிருக்கும் உரை நூலின் பெயரை வெளியிட்டுள்ளார். வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் வெளியாகவுள்ளதாக காணொலி வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் மூத்த பாடலாசிரியராகவும் கவிஞராகவும் திகழும் வைரமுத்து, கடந்த சில மாதங்களாக திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதி வருவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திருக்குறள் உரை முழுவதும் நிறைவடைந்தது என அறிவித்தார். அதுகுறித்த அவரது அறிவிப்பில்,
‘உலகத் தமிழ் உள்ளங்களே வணக்கம். திருக்குறள் நிறைந்துவிட்டது; முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன். ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன்; கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது. ஈராயிரம் ஆண்டை இருபது வயதிற்கு எடுத்துச் செல்வது; அறமும், பொருளும் ஞானப் பொருளாகவும், இன்பம் கவிதைப் பொருளாகவும் உரை செய்யப்பட்டிருப்பது பிறந்த பெருங்கடமைகளுள் ஒன்று. நிறைவுற்றதாய் நெஞ்சமைதி கொள்கிறேன். நூலின் தலைப்பை மே 22-ம் தேதி இதே தளத்தில் அறிவிக்கிறேன். நீங்கள் என்மீது வீசும் ஒவ்வொரு பூவிலும் குருதி சிலிர்க்கும்; உறுதி பிறக்கும். திருக்குறளை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வோம் வாழ்க வள்ளுவம்; வெல்க குறள்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, புத்தகத்தின் தலைப்பைக் காணொலி மூலம் அறிவித்திருக்கிறார். அவரது பதிவில், ”தருமரும், மணக்குடவரும், தாமத்தரும், நச்சரும், பரிதியும், பரிமேலழகரும், திருமலையரும், மல்லரும், பரிப்பெருமாளும், காளிங்கரும், பின்னாளில் வ.உ.சிதம்பரனாரும், தேவநேய பாவணரும், புலவர் குழந்தையும், மு வரதராசனாரும், இன்னும் பல சான்றோர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், நாவலரும் எழுதி முடித்த பிறகும் கூட, திருக்குறளுக்கு இன்னும் உரை மிச்சப்பட்டிருக்கிறது. அதை நான் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.” என்று குறிப்பிட்டார். மேலும் புத்தகத்திற்கு ‘வள்ளுவர் மறை, வைரமுத்து உரை’ என்று தலைப்பு வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
திருக்குறள் உரை
தலைப்பு அறிவிப்பு#திருக்குறள் | #திருவள்ளுவர்#வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை pic.twitter.com/r4EFl6tBFF— வைரமுத்து (@Vairamuthu) May 22, 2025
இது வைரமுத்துவின் 37-வது நூலாக வெளிவரவுள்ள நிலையில், ஜூலை மாதம் புத்தகம் வெளியிடப்படும் என்று வைரமுத்து கூறியிருக்கிறார்.
