தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவளிப்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிக்கட்சியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், முழுமையான பெரும்பான்மையை எட்ட தவெகவுக்கு இன்னும் சில எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 5 எம்.எல். ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஆதரவு வழங்கிவிட்டது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளிடன் விஜய் ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், “மீண்டும் தேர்தல் வரக் கூடாது” என்ற அடிப்படையில் தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நாளை ஆதரவு கடிதம்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை கடிதம் வாயிலாக வெளியாகலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கருத்தே இந்த முடிவின் மையமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்கள் இந்த தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். அதனால், எந்தக் கட்சியும் தங்களது அரசியல் பிடிவாதத்திற்காக மாநிலத்தை மீண்டும் தேர்தலுக்கு இழுத்துச் செல்லக் கூடாது என்பதே விசிக மற்றும் இடதுசாரிகளின் நிலைப்பாடாக உள்ளது.
மேலும், ஒரு தேர்தலை நடத்த அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். இந்த நிலையில், மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல், நிலையான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெக நினைப்பது என்ன?
அதேநேரத்தில், இந்த ஆதரவு முழுமையான அரசியல் கூட்டணியாக இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், மொழி பாதுகாப்பு போன்ற கொள்கை அடிப்படைகளில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசின் அழுத்தங்களுக்கு பணியாமல் மாநில உரிமைகளை காக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் இடம்பெற்றிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தவெக தரப்பும் இந்த ஆதரவைக் கவனமாக அணுகி வருவதாக கூறப்படுகிறது. காரணம், புதிய கட்சியாக ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில், அனுபவமுள்ள கட்சிகளின் ஆதரவு அரசியல் நிலைத்தன்மைக்கு உதவும் என்ற புரிதல் தவெக வட்டாரங்களில் உள்ளது.
புதிய அரசியல் கூட்டணி
அதேவேளை, இந்த அரசியல் நகர்வு திமுக கூட்டணிக்குள் புதிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விசிக தலைவர், திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தபோது, ”அவசரப்பட வேண்டாம். திமுக கூட்டணியிலேயே தொடருங்கள்” என ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை திமுக அணியில் இருந்த இந்த கட்சிகள் தற்போது தவெக பக்கம் நகரும் சாத்தியம் உருவாகியிருப்பது, அறிவாலய வட்டாரத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் திறனாய்வாளர்கள், ”இது சாதாரண ஆதரவு அரசியல் அல்ல; தமிழகத்தில் புதிய அரசியல் மையம் உருவாகிறதற்கான அறிகுறியாக இருக்கலாம்” எனக் கூறி உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக திமுக – அதிமுக என்ற இரு துருவ அரசியலுக்குள் இருந்த தமிழ்நாடு, தற்போது புதிய கூட்டணி கணக்குகளுக்குள் நகரத் தொடங்கியிருப்பதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
மொத்தத்தில், விசிக மற்றும் இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ள தகவல், தமிழக அரசியலில் அடுத்த கட்ட ஆட்சிக் கணக்கை முற்றிலும் மாற்றக்கூடிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசியலின் அடுத்த பாதையை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பா. முகிலன்
