தமிழக அமைச்சரவையில் இன்று மேலும் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர்களாக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவியேற்ற அன்று அவருடன் மேலும் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல் குமார், வெங்கடரமணன், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களானார்கள்.
இதைத் தொடர்ந்து மே 21ஆம் தேதி தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கபட்டது. தவெகவைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள், தவெகவுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸை சேர்ந்த ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 21 பேருக்கு ஆளுநர் அர்லேகர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளித்த விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தரப்படும் எனவும், அவர்கள் தவெக அமைச்சரவையில் இணைய வேண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை இருகட்சிகளும் ஏற்றுக் கொண்ட நிலையில், முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதி எம்.எல். ஏ ஷாஜஹானும், விசிக சார்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ வன்னியரசுவும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்கும் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில், ஷாஜஹான் மற்றும் வன்னியரசுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன் மூலம் தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 35 அமைச்சர் பதவிகளும் பூரணமாகியுள்ளது. அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மட்டும் அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில், இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வன்னியரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்படும் எனதும், இதற்கான அறிவிப்பு சிலமணி நேரங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
