விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நீட் தேர்வு சர்ச்சையில் தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது என்றும், பிரதமர் நரேந்திர மோடியே பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “ஒரு தனி நபரை மாற்றுவதால் அடிப்படைப் பிரச்சினை தீராது. அதிகாரிகளை மாற்றினாலும், அமைச்சர்களை மாற்றினாலும் விளைவுகள் மாறாது” என்று திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

அம்பேத்கர் சிலையைத் திறந்து வைக்காதது குறித்தும் அவர் விமர்சனம் செய்தார். “போன ஆட்சியில் இருந்த போலீஸை மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்தாலும், அம்பேத்கர் சிலையை ஷீட் போட்டு மூடும் செயல் தொடர்கிறது. என்ன மாற்றம்?” என்று கேள்வி எழுப்பினார். நீட் தேர்வைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் ஒரே தேர்வாக நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை (NTA) உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் தனியாகத் தேர்வு நடத்த முடியாதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எவ்வளவு உயர்ந்தாலும் நீட் மதிப்பெண்ணே முக்கியமாகிறது. 1,200க்கு 1,190 எடுத்த மாணவர்களுக்குகூட இடம் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மாதக்கணக்கில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தேர்வு கசிவுகள் இந்த அமைப்பின் ஓட்டை உடைசல்களை வெளிச்சமிட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பணம் புரளும் வணிகமாக இது மாறியுள்ளது. மாணவர்கள் மற்றும் குடும்பங்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கத் தயாராக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பை சீரமைப்பதற்குப் பதிலாக முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது.

நீட் தேர்வை காங்கிரஸ் ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. பாஜக ஆட்சியிலும் தொடர்கிறது. இரு கட்சிகளுமே அதை ரத்து செய்ய முன்வரவில்லை. “நீட் தேர்வே கூடாது என்பது விசிகவின் ஒற்றை முழக்கம்” என்று திருமாவளவன் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். தர்மேந்திர பிரதானை மட்டும் குற்றம் சாட்டுவது முழுமையான தீர்வு அல்ல. அடிப்படையில் மத்திய அரசின் கொள்கையே தவறு. எனவே மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நீட் போன்ற தேர்வுகளை முற்றிலுமாக ஒழிப்பதே நிரந்தர தீர்வு என்பது விசிகவின் உறுதியான நிலைப்பாடு.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version