கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய தகவல்கள் இணையத் தாக்குதல் மூலம் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டமைப்பு, உபகரணங்கள் வழங்குநர்கள், காப்பீடு உள்ளிட்ட முக்கிய தரவுகள் இணையத் தாக்குதலின் மூலம் திருடப்பட்டு டார்க் வெப்பில் (Dark Web) கசிந்திருப்பதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் திருட்டை, அணுமின் நிலைய வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனமும் உறுதிப்படுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் விவகாரத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தத் தரவுகள் தவறான கைகளுக்குச் சென்றால் தேசிய பாதுகாப்பு மற்றும் முக்கிய கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டிலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய வேல்முருகன், அதன்பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் பலப்படுத்தப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

எனவே, கசிந்ததாகக் கூறப்படும் தரவுகளின் தன்மை என்ன, அவை தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது மக்களின் பாதுகாப்பிற்கோ ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா, அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் முழுமையான விளக்கத்தை பெற்று மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version