முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பிற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நடைபெறும் “இரவல் ஆட்சி” இது என்றும், விஜய் இன்னும் முதலமைச்சருக்கான அரசியல் அந்தஸ்தைப் பெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, தவெக அரசின் செயல்பாடு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

“திமுகவை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் தவெகவுக்கு சென்றவர்களுக்கு, இறுதியில் முதல்வர் விஜய் அல்வா கொடுத்துவிட்டார்” என்று அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தவெக அரசு இரண்டு கால் கொண்ட நாற்காலியைப் போல தடுமாறிக் கொண்டிருக்கிறது. பிற கட்சிகளில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கித்தான் விஜய் ஆட்சி நடத்துகிறார். அதனால் அவர் இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” என்றார்.

முதலமைச்சர் விஜய் முன்பு “திமுக-அதிமுக கூட்டு களவாணிகள்” என்று கூறியிருந்ததற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை தவெகவில் சேர்த்துக் கொண்ட விஜய்தான் உண்மையான களவாணி” என பதிலடி கொடுத்தார்.

மேலும், “தமிழ்நாட்டில் உண்மையில் ஆட்சி நடக்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது. முதலமைச்சர் விஜய் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக எதையும் பேசுவதில்லை. வெறும் பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே பேசி வருகிறார்” என்று விமர்சித்தார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், “மேகதாது பிரச்சினைக்கு புதிய நடுவர் மன்றம் அமைப்பது தேவையற்றது. தமிழக மக்களின் உரிமைப் பிரச்சினைகளுக்காக முதலில் குரல் கொடுப்பது எப்போதும் அதிமுகதான்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version