திமுக – காங்கிரஸ் இடையிலான விவகாரங்களில் ‘தவெக’வை பகடைக்காயாக வைத்து ஆடப்படும் அரசியல் விளையாட்டுகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள விஜய் – ராகுல் இடையிலான சந்திப்பு பற்றிய தகவல் தான் சத்தியமூர்த்தி பவனில் கிசுகிசுக்கப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக பார்ப்போமா?

‘காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்’ என்ற தகவல் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி பூதாகாரத்தை கிளப்பியதன் அடுத்தபடியாக, தற்போது “தமிழ்நாட்டின் நிலுவைக்கடன் மோசமான நிலையில் உள்ளது. உத்திரபிரதேசத்தை விட அதிகமான நிலுவைக்கடன் உள்ளது” என பெயரை குறிப்பிடாமல் திமுக அரசு மீது நேரடித்தாக்குதலை முன்வைத்தார் பிரவீன் சக்ரவர்த்தி. இது ஏற்கனவே கழன்று கொண்டிருக்கும் கூட்டணிக்கும் பெட்ரோலை ஊற்றியது போல் பற்றி எரிந்து வருகிறது. திமுகவிலிருந்தும் விசிகவிலிருந்தும் அடுத்தடுத்து எதிர்தாக்குதல்கள் பிரவீன் சக்ரவர்த்தி மீது தொடுக்கப்பட, உட்சபட்சமாய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையே, “பிரவீன் சக்ரவர்த்தி RSS பின்புலம் கொண்டவர்?” எனும் அளவிற்கு கடுமையாக சாடினார். “ஒருவேளை அவ்வாறு இருப்பின் அது ராகுலுக்கு தெரியாதா?” “பின் அவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை?” போன்ற கேள்விகள் எழுவது இயல்பு தான்.

அதனைப்பொறுத்து பார்க்கையில், ஒரு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது, தென் மாநிலங்களில் முக்கிய புள்ளிகளுள் ஒருவரான கே.சி.வேணுகோபாலுக்கு முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஒருவர், “உங்கள் பெயரை சொல்லியே பிரவீன் சக்ரவர்த்தி இப்படி ஒரு விளையாட்டை விளையாடி வருகிறார். அவரை இதோடு நிறுத்திச்சொல்லுங்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறோம். இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்கள்” என வார்னிங் கொடுத்துள்ளாராம். விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என முயன்று வரும் கே.சி.வேணுகோபாலும் பிரவீன் சக்ரவர்த்தியும் இந்த வார்னிங்கை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? உண்மையில் இந்த வார்னிங் ராகுல், சோனியாவிடமிருந்து வந்ததா? எனபதெல்லாம் கூடவே தொக்கி நிற்கும் கேள்விகள்.

இது ஒருபுறமிருக்க, வரும் புத்தாண்டை முன்னிட்டு ராகுலை சந்தித்து விஜய் வாழ்த்து கூற தவெக தரப்பிலிருந்து நேரம் கேட்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் தரப்பும் விரைவில் பதில் சொல்வதாக கூறியுள்ளனராம். இது உண்மை தானா? அல்லது திமுக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க நடக்கும் சதியா? எனும் கேள்விகள் நம் மனதை பெரும்பாலும் ஆக்கிரமித்தாலும், ‘அரசியலில் எதுவும் நடக்கலாம்’ எனும் கூற்றின் மேல் நின்று யோசிக்கையில், அப்படியொரு சந்திப்பு நிகழும்பட்சத்தில், அது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகும். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அணுகுண்டு சோதனை நடத்துவது போல் ஆகிவிடும் என கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ராகுலும் விஜய்யும் முன்பே நண்பர்கள் தான் என்றாலும் கூட, இந்த சூழலில் நிச்சயமாக இச்சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைமை நிதானமாக யோசித்தே முடிவெடுக்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version