காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வு பிரிவு தலைவரும் ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, தனது எக்ஸ் தள பக்கத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னையில்   செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: பிரவீன் சக்கரவர்த்தி ஒரு குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

டெல்லியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கேவோ, ராகுல் காந்தியோ, இவர்களை சென்று சந்தியுங்கள் என்று பிரவீன் சக்கரவர்த்திக்கு சொல்லவில்லை. அவர்களின் பெயர்களை பிரவீன் சக்கரவர்த்தி தவறாக பயன்படுத்துகிறார் என்பது எனக்கு தெரிய வந்தது.

உத்தரபிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சியை தூக்கி பிடித்து, தமிழகத்தில் நடைபெறும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சியை தாழ்த்தி பேசுவதை, விமர்சிப்பதை ஒருபோதும் தமிழ்நாடு காங்கிரஸ் அனுமதிக்காது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் படையெடுப்பது போன்று, பிரவீன் சக்கரவர்த்தியும் படையெடுப்பது ஏன் என்பது புரியவில்லை. இது தேவையில்லாத வேலை. தமிழ்நாடு காங்கிரஸூக்கு தலைவராக நான் இருக்கிறேன்.

அகில இந்திய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் செய்ய பிரவீன் சக்கரவர்த்திக்கு விருப்பம் இருந்தால் என்னிடம் சொல்லி இருக்கலாம். அவர் உத்தரபிரதேச பாஜக ஆட்சியை புகழ்ந்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். பிரவீன் சக்கரவர்த்தி மீது புகார் தெரிவித்து காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version