திருப்பூரின் மையப் பகுதியான பூச்சக்காடு மாஸ் பேக்கரி சந்திப்பு அருகே, கஞ்சா போதையில் பத்துப்பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரையொருவர் நடுரோட்டில் பயங்கரமாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு ரயில் மூலம் திருப்பூர் திரும்பும்போது, ரகசியமாக கஞ்சா, குட்கா மற்றும் போதை சாக்லேட்டுகளைக் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றை அவர்கள் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பிறருக்கும் விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தடுக்க திருப்பூர் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கோவில்வழி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பூச்சக்காடு போன்ற உட்புறப் பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணி போதிய அளவில் இல்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கண்காணிப்பு குறைபாட்டினாலேயே, போதை ஆசாமிகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் சண்டையிடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன
பூச்சக்காடு பகுதியில் கஞ்சா போதையில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது மாநகர காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் போலீஸ் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினால் மட்டுமே போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
