நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரப்புரைகள், சுவர் விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் என பல்வேறு வகையிலும் அவை பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கான வாக்குரிமை குறித்து எவ்வித முன்னெடுப்பும் எடுக்கப்படுவதில்லை.
டிசம்பர் 21, 2023 கணக்கெடுப்பின்படி இந்திய சிறைகளில் மொத்தம் 5,30,333 சிறைவாசிகள் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு சிறைகளில் 19,738 சிறைவாசிகள் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கிறது.
தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மட்டுமே பெரும்பாலும் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றுகின்றனர். மற்றவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தவிர விசாரணை சிறைவாசிகளின் வாக்குரிமையும் பறிக்கப்படுகிறது.
இந்திய சிறைகளில் உள்ளவர்களில் ஏறத்தாழ 75 சதவிகிதம் பேர் விசாரணை சிறைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 80 முதல் 90 சதவீதத்தினர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்படுகின்றனர்.
சிறைவாசிகள் வாக்களிப்பதை தடுப்பதன் மூலம் அரசியலை கிரிமினல் மயமாவதில் இருந்து பாதுகாக்கலாம் என கருத்து கூறப்பட்டாலும், இன்றைய மக்களவை உறுப்பினர் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பலரும் குற்றவழக்குகளை எதிர்கொள்பவர்களாகவே இருந்து வருகின்றனர். இதனால், சிறைவாசிகளின் வாக்குரிமையை பறிப்பதன் மூலம் அரசியல் கிரிமினல் மயமாவதை தடுக்க முடியாது.
எனவே, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழாவில் சிறைவாசிகளை ஒதுக்கி வைப்பது என்பது ஜனநாயகத்துக்கு முரணானதாகும்.
உலகின் பிற பகுதிகளில் சிறைவாசிகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை தேர்தல் ஆணையமும் அரசும் அலசி ஆராய்ந்து இந்திய சிறைகளில் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
