விவாடெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு சென்றடை பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கான தனது முக்கிய வெளிநாட்டுப் பயணத்தின் இறுதி நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸைச் சென்றடைந்தார். ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பின்னர், எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரிலிருந்து பாரிஸ் வந்த அவருக்கு இந்திய வம்சாவளியினர் பாரம்பரிய இந்திய முறையில் அன்பான வரவேற்பு அளித்தனர். இந்திய தேசியக் கொடிகளை ஏந்திய பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அவரை வரவேற்றதுடன், இந்தியா-பிரான்ஸ் இடையிலான நட்புறவை வலியுறுத்தும் முழக்கங்களையும் எழுப்பினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளன.
பிரான்ஸில் வாழும் இந்திய சமூகத்தினர் பிரதமரின் வருகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். அவர்களில் பலர் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆவர். பிரதமர் மோடி தனது சமூக ஊடகப் பதிவில், “பாரிஸில் கிடைத்த அன்பான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய வம்சாவளியினரின் தொடர் முயற்சிகள் பாராட்டுக்குரியவை” என்று தெரிவித்தார். உலக முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பாரிஸில் நடைபெறும் VivaTech 2026 உச்சிமாநாட்டில் பங்கேற்பு ஆகும். ஐரோப்பாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் மாநாடுகளில் ஒன்றான இந்த நிகழ்வின் 10ஆவது பதிப்பில் பிரதமர் மோடி சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புதுமை முனைவோர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் இந்தியா AI (செயற்கை நுண்ணறிவு) நாடாக சிறப்பு பங்குதாரராக அமைந்துள்ளது. இந்தியா பெவிலியன் (Hall 7.1) மூலம் 80க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் AI, டீப் டெக், செமிகண்டக்டர் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறைகளில் தங்கள் சாதனைகளை வெளிப்படுத்துகின்றன.
பிரதமரின் இந்தப் பங்கேற்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், AI, ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் மற்றும் புதுமைத் துறைகளில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-பிரான்ஸ் இடையிலான ‘இன்னோவேஷன் ஆண்டு’ சூழலில் இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்தும். ஜி7 உச்சிமாநாட்டில் உலக தெற்கு நாடுகளின் குரலாக ஒலித்த பிரதமர், தற்போது தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை உலக அரங்கில் மேலும் உயர்த்துவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்தப் பயணம் இந்தியாவின் உலகளாவிய பங்காற்றலை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்துள்ளது.
