ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டமன்றம் கூடும் போதெல்லாம் ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. முதலமைச்சர் சார்பில் எழுதிக் கொடுக்கப்படுவதை ஆளுநர் படிக்க மறுப்பதும், தேசிய கீதம் பாடப்படவில்லை என ஆளுநர் கோபித்துக் கொண்டு அவையை விட்டு வெளியேறுவதும் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கடந்த திமுக ஆட்சியின் போது ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி 2022-ம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தில், தனது உரையை முழுமையாக படித்தார். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அடுத்த ஆண்டு 2023-ம் ஆண்டு சட்டமன்ற முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி ஆகிய சொற்களை கூறாமல் தவிர்த்தார்.

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு கொடுத்த உரையில் இருப்பது தான் அவைக் குறிப்பில் ஏற்றப்படும் எனக் கூற, அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தொடர்ந்து 2024-ம் ஆண்டு சட்டமன்ற முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரைக்கு முன்னால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது, தேசியக் கீதம் பாடப்படவில்லை எனக் கூறி உரையை வாசிக்காமல் அவையை புறக்கணித்து சென்றார். ஆனாலும் ஆளுநர் உரையை தமிழில் வாசித்த சபாநாயகர் அப்பாவுவின் பேச்சு அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 2025-ம் ஆண்டு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும் கூறி, அவையில் உரையை வாசிக்காமல் வெளியேறினார். இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்திலும் தேசியக் கீதம் பாடப்படவில்லை எனக் கூறி மீண்டும் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் வெளியேறினார்.

இப்படி, 2023-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்கவில்லை. இந்த நிலையில், தவெக தலைமையிலான ஆட்சிப் பொறுப்பேற்று, முதல் சட்டமன்றக் கூட்டம் இன்று கூடியது. தமிழ்நாட்டிற்கும் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டார். புதிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல் சட்டமன்ற கூட்டத்தில் தனது உரையை முழுமையாக வாசித்தார். இதுவரை சட்டமன்றத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மரபு இந்தாண்டு மாற்றப்பட்டுள்ளது.

பொதுவாக ஆளுநர் உரைக்கு பிறகு இறுதியாக மட்டுமே தேசிய கீதம் பாடப்படும். ஆனால் இந்தாண்டு ஆளுநர் உரைக்கு முன்பும், பின்பும் என இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version