மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்படும் கட்டணக் கழிப்பறைகளில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதை தடுக்க மதுரை வடக்குத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கல்லாணை, நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் முகக்கவசம் அணிந்து, சாதாரண பயணியைப் போல ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு சென்ற எம்.எல்.ஏ-விடம், கழிப்பறை பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட 2 ரூபாய்க்குப் பதிலாக 5 ரூபாய் வசூலித்தனர். எம்.எல்.ஏ என்று தெரியாத நிலையில், முறையற்ற பதில்களைக் கூறிய பணியாளர்களை அவர் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, “மதுரைக்காரர்களுக்கு 2 ரூபாயா, ராமநாதபுரம் காரர்களுக்கு 5 ரூபாயா? கழிப்பறையில் என்ன ஆஃபரா கொடுக்கிறீர்கள்?” என்று அங்கிருந்தோரைத் தனது பாணியில் கலாய்த்தார்.

மேலும், அங்கு கழிப்பறைகள் மிகவும் அசுத்தமாக பராமரிக்கப்பட்டதையும், சில பணியாளர்கள் பணியின்போது மது அருந்தியிருந்ததையும் எம்.எல்.ஏ நேரில் கண்டார். உடனடியாக அந்த ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்களை அழைத்து, “அடுத்த முறை கூடுதல் கட்டணம் வசூலித்தால், மாநகராட்சி அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது” என்று எச்சரித்தார்.

தொடர்ந்து, மதுரை ஆம்னி பேருந்து நிலையத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள இலவசக் கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தியதுடன், பேருந்து உரிமையாளர்களிடம் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். நள்ளிரவில் எம்.எல்.ஏ களத்தில் இறங்கி மேற்கொண்ட இந்த அதிரடி ஆய்வு, மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version