ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் போதையில் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சந்த்பாலி தொகுதியில் உள்ள ராம்பூர் பினாபானி அரசு உயர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஸ்ரீநாத் தாஸ். இவர் மதுபோதையில் பொது வீதிகளில் தள்ளாடியபடி சென்றதாகவும், பொதுமக்களிடம் கோபமாகவும், முரண்பாடாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செயலை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சுமார் 107 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரின் இந்தச் செயல், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய ஒரு பொறுப்பான நபர் செய்ய வேண்டியதல்ல என்று அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு ஆசிரியர் சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இத்தகைய செயல் கல்வித் துறையின் ஒழுக்க நெறிகளைச் சிதைப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சர்ச்சை குறித்துப் பேசிய சந்த்பாலி வட்டாரக் கல்வி அலுவலர், அந்த ஆசிரியர் சம்பவம் நடந்த அன்று பள்ளிக்கு வராதது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறினார். முதற்கட்ட நடவடிக்கையாக, அந்த ஆசிரியரின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தக் கல்வித்துறை சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version