மிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையான விமர்சனம் செய்துள்ளார். இதற்கு விசிக தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எளிய மக்கள், விளிம்புநிலை சமூகத்தினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் விசிக, தற்போது அந்த இலக்கை நோக்கி முக்கிய அடியெடுத்து வைத்துள்ளது. இன்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த நடவடிக்கையை திமுகவின் ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகத் தாக்கினார்.

ஆ.ராசா தனது பதிவில்,

”முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’

வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு

முட்டுக் கொடுக்குமென்றால்;

பூ முடித்தவனை புறந்தள்ளி —

புணர்ச்சிக்கு வேறிடம்

தேடுவதில் தவறில்லை!

பெரியாரின்

‘காலதேச வர்த்தமான’ த்திற்கு

காத்திருப்போம் ;  என்றாலும்

களமாடுவோம் !

வெற்றி நமக்கே!!” என்று காட்டமாக விமர்சித்தார்.

விசிக பதிலடி

இந்நிலையில் இந்தக் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், செய்யூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி உடனடியாகப் பதிலடி கொடுத்தார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

“அதிகாரம் எளியவர்க்கு

அதிலென்ன ஆத்திரம்

ஆற்றாமையால் அள்ளிவீசும்

அவதூறுகள் அசைத்திடாது

அமைதியாய் கடப்பது

அநாகரீகம் தவிர்க்கவே.

அநீதி தொடர்ந்து

அனைத்தும் உரைத்தால்

அணைக்க முடியா

அனலில் தகித்து போவீர்!”

விசிக தரப்பில், ‘‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனும் முழக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதை ஆ.ராசா சகித்துக்கொள்ள முடியாமல், வெறும் ஆற்றாமை மற்றும் அரசியல் பயத்தால் இத்தகைய அவதூறுகளை அள்ளி வீசுகிறார்’’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அநாகரிக அரசியலைத் தவிர்க்கும் வகையில் தற்போதைக்கு அமைதி காக்கப்படுவதாகவும், தொடர்ந்து அநீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்டால் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதி, அதிகாரப் பகிர்வு போன்ற விவகாரங்கள் தமிழக அரசியலில் மீண்டும் மையமாகியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version