ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி 732 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 163+) குவித்து அசத்தியிருந்தாலும், கில் T20 அணியில் சேர்க்கப்படாததற்கு தேர்வுக் குழுவின் நீண்டகால திட்டமிடலே முக்கியக் காரணம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்மன் கில் தற்போது இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். அடுத்த 18 மாதங்களில் இந்தியா 9 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக சுமார் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடினால் அவருக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வு ஏற்படலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு கில்லிடம் முன்கூட்டியே விரிவாக விவாதித்துள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டு முக்கிய ஐசிசி தொடர்களுக்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதே அணியின் இப்போதைய தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது T20 அணியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா போன்ற டாப்-ஆர்டர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பிஸியாக இருப்பதால், டி20-யில் மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கில் தற்போதைய டி20 திட்டங்களில் இல்லை என்றாலும், அவர் முற்றிலும் ஒதுக்கப்படவில்லை. 2027 உலகக் கோப்பை முடிந்த பிறகு, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் 2028 T20 உலகக் கோப்பை தொடர்களுக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் வலுவாகக் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
