ந்திய கலாச்சாரத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு அரணாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால், நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி  விடுத்த வேண்டுகோள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஒரு ஆண்டிற்கு திருமண நகைகள் உட்பட எவ்வித தங்கம் வாங்குவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேசமயம் தங்கம் மீதான இறக்குமதி வரியையும் 9 சதவீதம் உயர்த்தி (6%-லிருந்து 15% ஆக) அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் எதிரொலியாக தங்கம் விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை, முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ₹15,400 க்கும், ஒரு சவரன் தங்கம் ₹1,23,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்துடன், நகைக்கடைகளில் தங்கம் வாங்கும்போது 3% ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி ஆகியவை கூடுதலாகச் சேர்க்கப்படும் என்பதால், ஒரு சவரன் நகையின் இறுதி விலை இன்னும் கூடுதலாக இருக்கும்.

இந்த விலை உயர்வும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வும் ஏன்..? பிரதமரின் வேண்டுகோள் காரணமாக தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டுமா…? சந்தை நிபுணர்கள் சொல்வது என்ன… பார்க்கலாம்.

ஈரான் போர் மற்றும் டாலர் மதிப்பு  உயர்வு

தற்போது உலகளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள், குறிப்பாக ஈரான் போர், சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போர்க்காலங்களில் முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்க டாலரை நோக்கி நகர்வதால், டாலரின் மதிப்பு பல மடங்கு உயர்கிறது. இதற்கு நேர்மாறாக இந்திய ரூபாய் போன்ற வளரும் நாடுகளின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைகிறது. டாலர் வலுவடைவது இந்தியாவிற்கு இறக்குமதி செலவை அதிகரிக்கிறது.

இறக்குமதி வரி உயர்வு – 15% ஆனது ஏன்?

இந்தியா தனது தங்கத்துக்கான தேவையைத் தானாகப் பூர்த்தி செய்ய முடியாது என்பதால், ஆண்டுக்கு 700 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் மாத சராசரி இறக்குமதி 83 டன்களாக உயர்ந்துள்ளது. இந்த இறக்குமதியைக் குறைக்கவே அடிப்படை சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு வரி (AIDC) சேர்த்து ஒட்டுமொத்த வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 57 டன் தங்கம் இறக்குமதி தேவையைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை 

ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதியை விட, மற்ற நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதி அதிகமாக இருந்தால் அது ‘நடப்புக் கணக்கு பற்றாக்குறை’ (CAD) எனப்படும். ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 40% மேல் உயர்ந்துள்ளது. எண்ணெய் இன்றியமையாதது என்பதால் அதை இறக்குமதி செய்தே ஆக வேண்டும். ஆனால், தங்கம் என்பது தற்காலிகமாக தவிர்க்கக்கூடிய ஒன்று.

இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை தற்போது 13.2 பில்லியன் டாலர்களாக (ஜிடிபியில் 1.3%) உள்ளது. இது மேலும் அதிகரித்தால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும். தங்கம் வாங்குவதைக் குறைப்பதன் மூலம் இந்த இடைவெளியைச் சரிசெய்ய முடியும் என்று பிரதமர் கருதுகிறார்.

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) மே மாதத் தொடக்கத்தில் ஒரே வாரத்தில் 7.7 பில்லியன் டாலர்கள் குறைந்து 690.69 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. தங்கம் இறக்குமதிக்கு நாம் டாலர்களையே செலுத்த வேண்டும். நாம் எவ்வளவு தங்கம் இறக்குமதி செய்கிறோமோ, அவ்வளவு அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும். இது நாட்டின் நிதிப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி

2017-ல் 64 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு, இன்று 95.5 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்திய ரூபாய் 12% சரிவைச் சந்தித்துள்ளது. தங்கம் இறக்குமதியை மக்கள் குறைத்தால் மட்டுமே டாலருக்கான தேவை குறையும், அதன் மூலம் ரூபாய் மதிப்பைத் தக்கவைக்க முடியும்.

விலை உயர்வு மற்றும் கடத்தல் அபாயம்

இந்த வரி உயர்வு காரணமாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த விலையேற்றம் மக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வரி அதிகமாக இருப்பதால் தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய மக்கள் பாரம்பரியமாக தங்கத்தை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள். தற்போது இந்தியர்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் தேசத்தின் பொருளாதார நலனே முக்கியம் என்பதால், பிரதமரின் இந்த வேண்டுகோள் ஒரு “பொருளாதாரப் போர்” போன்றது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர் சூழலில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்க, மக்கள் தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்குத் தள்ளி வைப்பது தேசத்தைக் காப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

– பா. முகிலன்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version