தமிழ்நாடு சட்டமன்றத்தை புதிய இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக அரசியல் வட்டாரங்களில் எழுந்து வருகிறது. தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் இயங்கி வரும் சட்டசபை அமைப்பு, நெரிசல் மற்றும் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தவெக அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 2006-2011ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் வளாகத்தில் அதிநவீன சட்டசபை கட்டிடத்தை நிர்மாணித்தார். ஆனால், அதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அந்தக் கட்டிடத்தை அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது. அதன்பிறகு சட்டசபை மீண்டும் கோட்டைக்குள் செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில், கோட்டை வளாகத்தின் நெரிசலை குறைக்கவும், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எளிதாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செயல்படவும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னைக்கு அருகிலுள்ள முட்டுக்காட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்துக்கு சட்டசபையை மாற்ற தவெக அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.535 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த மையத்தில் 5,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கம் மற்றும் ஒரே நேரத்தில் 10,000 பார்வையாளர்களை ஏற்றுக்கொள்ளும் மாபெரும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூன் இந்த இடத்துக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். இந்த மாற்றம் சட்டசபை செயல்பாடுகளை சீராக்குவதோடு, நவீன வசதிகளுடன் கூடிய சிறந்த சூழலை உருவாக்கும் என அரசு வட்டாரங்கள் நம்புகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version