மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு செல்லும் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகிறார்.
ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

