தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், ‘பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் பார் ரைசிங் இந்தியா’ (பி.எம்.ஸ்ரீ) திட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தேசியக்கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இருப்பதால், தி.மு.க. தலைமையிலான கடந்த அரசாங்கம் ஏற்கனவே பின்பற்றி வரும் இருமொழிக்கொள்கையே போதும் என சொல்லி இந்த திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது. இந்த திட்டத்தில் இணைய மறுத்ததன் விளைவாக, மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட கல்வி நிதிக்காக ஒதுக்கும் ரூ.3,500 கோடியை தமிழக அரசுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்தது.

இந்த விவகாரம் கடந்த தி.மு.க. ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்தது. நீங்கள் பணம் தராவிட்டால் என்ன? நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவோம் என அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது மக்களவையில் கூட எதிரொலித்தது.

இந்த சூழ்நிலையில், தற்போது மத்திய அரசு மீண்டும் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் ‘பி.எம்.ஸ்ரீ’ பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்க இருக்கும் சூழலில் மத்திய அரசு இந்த கடிதத்தை எழுதியுள்ளது.

புதிய அரசாங்கம் இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறது? கடந்த தி.மு.க. அரசு கையாண்ட வழியிலேயே கையாளுமா? அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திட முனைப்பு காட்டுமா?, நிறுத்தி வைக்கப்பட்ட கல்விக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பன போன்றவை பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version