மகளிர் டி20 உலகக்கோப்பை கிராண்ட்ஸ்லாம் தொடரில் இந்திய அணி மீண்டும் ஒருமுறை லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அடைந்த தோல்வியால், இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை, ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி எளிதாக எட்டியது. மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய சேஸிங் சாதனை ஆகும். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன் பதவி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் விளக்கம் அளித்துள்ளார்.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில், “ஹர்மன்பிரீத் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?” எனப் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பயிற்சியாளர் அமோல் முஜும்தார், “அணியின் கேப்டனைத் தேர்ந்தெடுப்பது முற்றிலும் தேர்வுக்குழுவின்  முடிவு. ஆனால் என்னைக் கேட்டால், எனது சுருக்கமான மற்றும் தெளிவான பதில் ‘ஆம்’ (ஹர்மன்பிரீத் நீடிக்க வேண்டும்) என்பதுதான்” என்று கூறி கேப்டனுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இதேபோல், இந்தியாவின் முன்னாள் வீராங்கனை அஞ்சும் சோப்ராவும் ஹர்மன்பிரீத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “தற்போதைய சூழலில் இந்திய அணியை வழிநடத்த ஹர்மன்பிரீத் கவுரே சிறந்த கேப்டன். வேறெந்த வீரரும் இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்கும் அளவிற்குத் தயாராக இல்லை. மகளீர் ப்ரீமியம் தொடரில் அதிரடியாக விளையாடும் நமது வீராங்கனைகள், இந்திய அணிக்கு வந்தவுடன் தங்களது ஆட்டத்தை மாற்றிக் கொள்கிறார்கள். டி20 கிரிக்கெட்டிற்குத் தேவையான பயமில்லாத அதிரடி ஆட்டமுறையை  டாப் ஆர்டர் பேட்டர்கள் கையில் எடுக்க வேண்டும். அதற்குரிய தீர்வை தேடுவதே இப்போதைய முக்கிய வேலை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version