வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பட்டறைகளில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இரவும் பகலும் ஓய்வின்றி கலைஞர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், பட்டறைகளிலேயே திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.
பல தலைமுறைகளாக இந்தக் கலைத் தொழிலை மேற்கொண்டு வரும் கைவினைக் கலைஞர்கள், இந்த ஆண்டும் பக்தர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவமைப்புகளில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு சிறப்பம்சமாக, பாகுபலி ஸ்டைல் விநாயகர், சிவன் தலையுடன் வடிவமைக்கப்பட்ட விநாயகர், குதிரை மற்றும் மயில் வாகனங்களில் காட்சியளிக்கும் விநாயகர், 8 அடி உயர மங்கள விநாயகர், மேலும் காளையுடன் மயில் வடிவில் 11 அடி உயர சிறப்பு விநாயகர் உள்ளிட்ட பல்வேறு புதிய மாடல்கள் தயாராகி வருகின்றன.
3 அடி முதல் 11 அடி உயரம் வரை பல்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் பெயிண்டிங் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அதன்பிறகு அடுத்த 10 முதல் 20 நாட்களுக்குள் பொதுமக்கள் பட்டறைகளுக்கு நேரில் வந்து தங்களுக்கு விருப்பமான சிலைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம் என்றும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், உள்ளூர் கலைஞர்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். அரசு விதிமுறைகளின்படி 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் தயாரிக்காமல் இருப்பதாக கூறும் அவர்கள், விழா நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 13 மற்றும் 14 அடி உயர சிலைகள் கொண்டு வரப்பட்டு நிறுவப்படுவது தங்களது தொழிலை கடுமையாக பாதிப்பதாக வேதனை தெரிவித்தனர்.
“அரசின் விதிமுறைகள் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும். நாங்கள் விதிகளை பின்பற்றுகிறோம் என்றால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சிலைகளுக்கும் அதே விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஒரு பெரிய விநாயகர் சிலையை உருவாக்குவது என்பது ஒரே நாளில் முடியும் பணியல்ல என்றும், ஒவ்வொரு சிலையின் பின்னாலும் 3 முதல் 4 மாதங்கள் வரை இடைவிடாத உழைப்பு, கைவினை நுணுக்கம் மற்றும் பல தலைமுறைகளாக கடத்தி வரும் பாரம்பரிய கலை அடங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
