சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் நடைபெற்ற 2026 உலகத் துடுப்புப் படகு போட்டியில் (World Rowing Cup III) இந்திய அணி வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இத்தொடரின் வரலாற்றிலேயே இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆண்களுக்கான ‘லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்’ (Lightweight Men’s Double Sculls) பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் லக்ஷய் மற்றும் உஜ்வவ் குமார் சிங் ஜோடி இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் படகைச் செலுத்தினர். பரபரப்பான இந்த பந்தயத்தில், 6 நிமிடம் 26.09 வினாடிகளில் இலக்கை எட்டி இந்த ஜோடி தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியது. இப்போட்டியில் ஹாங்காங் ஜோடி (6:27.14) வெள்ளிப் பதக்கத்தையும், நெதர்லாந்து ஜோடி (6:27.36) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன.
இந்திய வீரர்களான லக்ஷய் மற்றும் உஜ்வவ் குமார் சிங் ஆகிய இருவருக்குமே இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும். தங்களின் அறிமுகத் தொடரிலேயே, உலகத் துடுப்புப் படகு போட்டியின் முதல் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்ற ஹாங்காங்கின் முன்னணி ஜோடியான லாம் சான் துங் – சான் திக் லுங் இணையை வீழ்த்தி இந்திய வீரர்கள் இந்த இமாலய சாதனையைப் புரிந்துள்ளனர்.
தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள லக்ஷய் மற்றும் உஜ்வவ் குமார் சிங் ஆகிய இருவரும் இந்திய ராணுவத்தில் ஹவில்தார்களாகப் (Havildar) பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் தொடரில் பங்கேற்ற 18 பேர் கொண்ட இந்தியக் குழுவில் 17 பேர் இந்திய ராணுவத்தையும், ஒருவர் இந்திய கடற்படையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி குறித்து ஆர்மி ரோயிங் நோட் (Army Rowing Node) கமாண்டிங் ஆபீசர் கர்னல் ராமகிருஷ்ணன் கூறுகையில், “இது இந்திய துடுப்புப் படகு விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல். லக்ஷய் மற்றும் உஜ்வவ் குமார் சிங்கின் இந்த வெற்றி, இந்திய ராணுவத்தின் உலகத் தரத்திலான பயிற்சிக்கும், அவர்களின் கடின உழைப்பிற்கும் கிடைத்த சான்றாகும். இந்த வெற்றி பல இளம் வீரர்களுக்கு உத்வேகமளித்து, இந்தியாவின் ஒலிம்பிக் கனவை நனவாக்க உதவும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
