டெல்லியில் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டத்தில் கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் ஆதரவு குவிந்தது. கட்சியின் நிறுவனர் அப்ஜீத் திப்கே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், நாட்டின் கல்வி அமைப்பில் உள்ள ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களுக்கு எதிரான இளைஞர்களின் கோபத்தை பிரதிபலிக்கிறது என்று பலரும் கருதுகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நாளில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையிலும், இயக்கம் தொடர்கிறது.

இந்தச் சூழலில், புகழ்பெற்ற ஆடிட்டர் குருமூர்த்தி, “கரப்பான் பூச்சி ஜனதா என்பது அராஜகவாதிகளுக்கான போலி முகமூடி. இது முன்கூட்டியே திட்டமிட்ட போராட்டம்” என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விமர்சித்தார். இந்தப் பதிவை ரீட்வீட் செய்த ஜோஹோ நிறுவன இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டை குழப்புவதும், முன்னேற்றத்தை தடுப்பதும்தான். இந்தியாவை பலவீனப்படுத்த விரும்பும் சக்திகள் இதற்கு துணைபோகின்றன. ஜனநாயகத்தில் மக்களின் கருத்தை வெளிப்படுத்த சரியான வழி தேர்தல் மட்டுமே” என்று கூறினார்.

இருப்பினும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த இயக்கம் இளைஞர்களிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தங்கள் கோரும் குரல்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்தப் போராட்டம் இந்தியாவின் கல்வி அமைப்பு மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version