பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15, 2025 அன்று 3 நாள் பயணமாக சைப்ரஸ், கனடா, மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இந்த பயணம் “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் இந்திய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் பயணத்தின் முதல் நாடாக நேற்று சைப்ரஸ் சென்றடைந்தார். அங்கு சைப்ரஸ் குடியரசுத் தலைவர் நிகோஸ் கிறிஸ்தோடோலைட்ஸ் (Nikos Christodoulides) அவர்களால் விமான நிலையத்தில் சடங்கு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இந்தியப் பிரதமர் சைப்ரஸுக்கு மேற்கொளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சைப்ரஸ் தலைநகர் நிகோசியாவில், பிரதமர் மோடி, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்தோடோலைட்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் கல்வி, டிஜிட்டல் கூட்டாண்மை, பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான கூட்டாண்மை மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் போன்ற உலகளாவிய வளர்ச்சிகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

சைப்ரஸில் உள்ள லிமாசோல் நகரில் நடைபெற்ற வர்த்தக மன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு அவர், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றத்தையும், வணிகம் செய்வதற்கான எளிமையும், கொள்கை நிலைத்தன்மையும் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். சைப்ரஸ் இந்தியாவின் ஒரு முக்கியமான பொருளாதார கூட்டாளி என்றும், குறிப்பாக நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் துறையில் சைப்ரஸின் ஆர்வம் பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா-கிரீஸ்-சைப்ரஸ் (IGC) வணிக மற்றும் முதலீட்டு கவுன்சிலின் தொடக்கத்தையும் பிரதமர் வரவேற்றார், இது கப்பல் போக்குவரத்து, தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிவில் விமான போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் முத்தரப்பு ஒத்துழைப்பை வளர்க்கும்.

சைப்ரஸ் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமையை ஏற்கத் தயாராகி வருவதால், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பு, இந்தியா-சைப்ரஸ் உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, சைப்ரஸின் மிக உயர்ந்த சிவில் விருதான “கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III” (Grand Cross of the Order of Makarios III) பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அவ்வப்போது பல்வேறு விமர்சனங்களும், செலவு குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் அவர் 72 நாடுகளுக்கு 151 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குறிப்பிட்டுள்ளார். மேலும், 2022 முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை பிரதமர் மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்கு மொத்தமாக ரூ.259 கோடி செலவானதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

சைப்ரஸிலிருந்து, மோடி கனடாவுக்குச் சென்று, அங்கு நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் கடைசி கட்டமாக மோடி குரோஷியாவுக்குச் செல்கிறார். ஒரு இந்தியப் பிரதமர் குரோஷியாவிற்கு மேற்கொளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version