ஜெய்ப்பூரில் இயங்கும் பல இனிப்பு கடைகள், இந்திய இராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புப் பொருட்களின் பெயர்களில் உள்ள ‘பாக்’ (Pak) என்ற சொற்றொடரை நீக்கியுள்ளன.
இந்த மாற்றம், பாகிஸ்தானை நினைவுபடுத்தும் வகையில் அந்த வார்த்தை இருக்கக்கூடாது என்ற உணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டுப்பற்று மற்றும் மக்கள் உணர்வுகளை மதிப்பதால், இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், மொட்டிப் பாக் இனிப்பு “மொட்டி ஸ்ரீ” எனவும், மைசூர் பாக் “மைசூர் ஸ்ரீ” எனவும், அதேபோல் ஆம்பாக் “ஆம் ஸ்ரீ” என்றும், கோன்ட்பாக் இனிப்பு “கோன்ட் ஸ்ரீ” என்றும் மாற்றப்பட்டுள்ளன.
பொதுவாக ‘பாக்’ என்ற வார்த்தையின் வேரானது சமஸ்கிருதத்தில் உள்ள “பகவா” (Pakva) என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் “சமைக்கப்பட்ட” அல்லது “முழுமையடைந்த” என விளங்குகிறது. மேலும் இந்தி மொழியில் ‘பாக்’ என்பது சர்க்கரைச் சாறு அல்லது இனிப்பு திரவத்தை குறிக்கிறது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்… 5 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு…
இருப்பினும், ‘பாக்’ என்ற சொல் பாகிஸ்தான் என்ற நாட்டின் பெயருடன் ஒத்த ஒலியைக் கொண்டிருப்பதால், சமீபத்திய தேசிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தை கடை உரிமையாளர்கள் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் கடைகளின் அறிவிப்புகள் வைரலாகி, பலரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.