ஆந்திராவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் நேற்று(30.06.2025) மனுநீதி நாள் நடைபெற்றது. அப்போது குண்டூர் மாவட்ட ஆட்சியரை கையில் மனு, தோளில் புத்தகப்பை ஆகியவற்றுடன் சென்று நேரில் சந்தித்தான் எட்டு வயது சிறுவன் யஷ்வந்த்.
சிறுவனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி பரிவுடன் அவளிடம் கேட்டறிந்தார். அப்போது குண்டூர் அரசு மருத்துவமனை அருகே என்னுடைய தாயார் தள்ளுவண்டி கடை வைத்து டிபன் வியாபாரம் செய்து வந்தார். ஆனால் நகராட்சி அதிகாரிகள் அந்த கடையை மூடிவிட்டனர். இதனால் பிழைக்கு வழியில்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருகிறோம்.
எனவே என்னுடைய தாயார் மீண்டும் அங்கு கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவன் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டான். அவனுடைய நிலையை அறிந்த ஆட்சியர் இது பற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுடைய தள்ளு வண்டி டிபன் கடை இன்று முதல் அங்கு மீண்டும் செயல்பட உள்ளது. விரைந்து உதவிய மாவட்ட ஆட்சியருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் தாயும் மகனும் நன்றி தெரிவித்துள்ளனர்.
