திருப்பதி திருச்சானூரை சேர்ந்த திலீப், அவருடைய சித்தப்பா மகன் வினய் ஆகிய இரண்டு பேரும் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று(01.07.2025) மாலை மது அருந்த முடிவு செய்த அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான கார் ஒன்றை பாராக மாற்றி மது அருந்த திட்டமிட்டனர். இதற்காக அந்த காரை திருச்சானூரில் உள்ள ரங்கநாதா வீதியில் ஓரமான இடத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு பேரும் மது அருந்தும் போது தங்களை யாரும் பார்க்க கூடாது என்பதற்காக முதலில் அந்த கார் மீது தார்ப்பாய் போட்டு மூடிவிட்டனர்.
அதனை தொடர்ந்து காருக்குள் மது பாட்டில்களுடன் சென்ற அவர்கள் காரின் ஏசியை ஆன் செய்து குளுகுளு சூழலில் உட்கார்ந்து மது குடித்தனர். அதன் பின் அப்படியே அவர்கள் காருக்குள் தூங்கிவிட்டனர். காரின் பெட்ரோல் தீர்ந்து ஏசி நின்று போய்விட்டது.
இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு போதையிலேயே அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இரண்டு பேரையும் காணாமல் தேடிய குடும்பத்தார் போன் செய்து பார்த்தபோது காரில் இருந்து ரிங்டோன் கேட்டது. கார் மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை விலக்கி பார்த்தபோது அவர்கள் காருக்குள் படுத்திருப்பது போல் தோன்றியது. ஆனால் அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.
எனவே உடனடியாக கார் கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருச்சானூர் போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
