இந்தியாவில் உள்ள அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களும் தங்களின் ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீத இருக்கைகளை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி (Free of Charge) பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்று DGCA உத்தரவிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள இந்தப் புதிய விதிமுறைப்படி, வரும் ஏப்ரல் 20, 2026 முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.
இந்தப் புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு விமானத்திலும் உள்ள இருக்கைகளில் பெரும்பான்மையானவை, முன்பதிவு செய்யும்போதே எவ்விதக் கட்டணமும் இன்றித் தேர்வு செய்யக்கூடிய வகையில் கிடைக்கப்பெற வேண்டும்.
தற்போது வரை பெரும்பாலான விமான நிறுவனங்கள் சுமார் 20 சதவீத இருக்கைகளை மட்டுமே இலவசமாக வழங்குகின்றன. மீதமுள்ள இருக்கைகளைத் தேர்வு செய்ய ரூ200 முதல் ரூ.2,100 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிறுவனங்கள் தெளிவான மற்றும் வெளிப்படையான இருக்கை ஒதுக்கீட்டு முறையைப் பராமரிக்க வேண்டும் என்றும் ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது, எந்தெந்த இருக்கைகள் காலியாக உள்ளன மற்றும் என்ன நிபந்தனைகள் பொருந்தும் என்பது குறித்து பயணிகளுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, விமான நிறுவனங்கள் தங்களது இணையதளங்கள் மற்றும் முன்பதிவுத் தளங்களில் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் தெளிவாகக் காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் பயணிகளின் வசதியிலும் கவனம் செலுத்துகின்றன. ஒரே முன்பதிவில் (PNR) பயணிக்கும் நபர்கள் முடிந்தவரை ஒன்றாக அமர்வதை உறுதி செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பயணிகளுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் இதில் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை. இண்டிகோ (IndiGo), ஏர் இந்தியா (Air India) மற்றும் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் இந்த முடிவை எதிர்த்துள்ளன. கட்டணம் செலுத்தி இருக்கையைத் தேர்ந்தெடுக்கும் வசதியை வரம்பிடுவது வருவாய் இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும், இந்த இழப்பைச் சமன் செய்ய விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு விலையை உயர்த்த வேண்டியிருக்கலாம் என்றும் அவை தெரிவிக்கின்றன.
இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பும் (FIA), இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இருக்கைத் தேர்வு, உடைமைகள் மற்றும் பிற கூடுதல் சேவைகளுக்காக வசூலிக்கப்படும் அதிகப்படியான கூடுதல் கட்டணங்கள் குறித்துப் பல பயணிகள் கவலை தெரிவித்து வரும் ஒரு சூழலிலேயே, இந்த முடிவு வெளியாகியுள்ளது.
