தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் இன்று உற்சாகமாகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின்  முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவருகின்றனர். அந்தவகையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ராசியான தொகுதியான கொளத்தூரில் நான்காவது முறையாகப் போட்டியிட இன்று மனுத் தாக்கல் செய்தார்.

சென்னை பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு மனுத் தாக்கல் செய்யச் சென்ற அவருக்கு, வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏற்கனவே இத்தொகுதியில் மூன்று முறை வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், மீண்டும் அதே தொகுதியில் களம் காண்பது அக்கட்சியினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், தமிழக அரசியலில் புதிய வரவாகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது  வேட்புமனுவைத் தாக்கல் செய்து முறைப்படி தேர்தல் களத்தில் குதித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்திலிருந்து கட்சித் தொண்டர்கள் புடைசூழ பிரம்மாண்ட கார் ஊர்வலமாகப் புறப்பட்ட அவர், பெரம்பூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார். பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவதால் அந்தப் பகுதி முழுவதும் தவெக தொண்டர்களின் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருமே இன்று ஒரே நாளில் மனுத் தாக்கல் செய்திருப்பது 2026 தேர்தல் களம் மிகக்கடுமையானப் போட்டியைக் காணப்போகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version