தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக நான்காவது முறையாகக் கொளத்தூர் தொகுதியில் களம் காண்கிறேன்.
கடந்த காலங்களில் இத்தொகுதி மக்கள் எனக்கு அளித்த ஆதரவும், அன்பும் ஈடுஇணையற்றது. இம்முறையும் கொளத்தூர் தொகுதி மக்கள் என்னை அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன்,” என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே அவர் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் தொகுப்புகள் அடங்கிய நம்ம கொளத்தூர் நம்ம முதல்வர் சாதனை புத்தகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இது வெறும் தேர்தல் வெற்றி மட்டும் அல்ல; திராவிட மாடல் கொள்கைக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரம். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளே, எங்களின் தேர்தல் பரப்புரையாக இருக்கும். ”சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.
குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் போன்றவை தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது.
புதிதாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர்களின் கட்சிகள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக குறித்தான கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தேசிய ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; தேர்தலில் போட்டியிடலாம் . ஆனால், தமிழக மக்கள் எப்போதும் முதிர்ச்சியான அரசியலையும், ஆக்கப்பூர்வமான வளர்ச்சியையுமே விரும்புவார்கள். எங்களின் திராவிட மாடல 2.0 திட்டங்கள் எதிர்க்கட்சிகளின் வெற்று முழக்கங்களை தவிடு பொடியாக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
வேட்புமனுத்தாக்கலை தொடர்ந்து நாளை முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவுள்ள முதலைமைச்சர், நன்னிலம் முதல் நாங்குநேரி வரை திமுகவின் அலை வீசுகிறது என்று கூறினார். மேலும் 234 தொகுதிகளிலும் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்,
