விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு என்ற தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விபத்தில், உடன் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்திருப்பதும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று (28.01.2026) காலை விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அஜித் பவார், இன்று புனேவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான தொடர் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பாராமதிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது இன்று காலை 8.45 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அஜித் பவார் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருடன் பயணித்த உதவியாளர்கள், கட்சி நிர்வாகி மற்றும் விமானி உள்பட 5 பேரும் உயிரிழந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதாக கொற்றப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்த சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். மாநிலத்தின் நீண்டகால துணை முதல்வர் பதவி வகித்த பெருமைக்குரியவர். முதன் முதலில் 1991இல் 10வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு மாதங்களுக்குள் அந்த பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு 8 முறை பாரமதி சட்டமன்றத் தொகுதியில் இருந்து MLA ஆக தேர்வு செய்யப்பட்டார். பல துறைகளுக்கு அமைச்சராகவும் செயல்பட்டிருக்கிறார். 6 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போதும் துணை முதல்வராக இருந்துள்ளார். இடையில் குடும்பம் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கட்சியை முழுமையாக அபகரிக்க நினைத்த அஜித், பாஜகவின் துணையோடு சரத் பவார் கட்சியை இரண்டாக உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். அதோடு அதிகபட்ச எம்எல்ஏக்களின் ஆதரவோடு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கி தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
